Coral reef  Reuters
தமிழ்நாடு

தமிழகக் கடலில் காத்திருக்கும் ஆபத்து! ‘சூப்பர் எல் நினோ’வால் அழியும் பவளப்பாறைகள்?

2026-27ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் சூப்பர் எல் நினோ காரணமாக தமிழ்நாட்டின் பவளப்பாறைகள் வெப்பமடைந்து அழியும் அபாயம் உள்ளது.

PT WEB

2026-27ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் 'சூப்பர் எல் நினோ' காலநிலை மாற்றத்தால், கடல்நீர் வெப்பமடைந்து தமிழ்நாட்டின் பவளப்பாறைகள் வெளுத்துப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், வனத் துறை மற்றும் மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா இணைந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப் பகுதிகளில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பவளப்பாறைகள், இந்தியாவின் பவளப்பாறைப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

coral reef

கடந்த 1998, 2010, 2016 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோ நிகழ்வுகளின்போது பவளப்பாறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, கடல்நீர் வெப்பநிலை, பவளப்பாறைகள் வெளுக்கும் அளவான 31 புள்ளி 2 டிகிரி செல்சியஸைக் கடந்தது. மன்னார் வளைகுடாவில் சராசரியாக 3.69 சதவீத பவளப்பாறைகளும், பாக் ஜலசந்தியில் 13.9 சதவீதப் பவளப்பாறைகளும் வெளுப்புப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

பாக் ஜலசந்தியில் 10.8 சதவீதப் பவளப்பாறைகள் முழுமையாகவும், 3.1 சதவீதம் பகுதி அளவிலும் வெளுத்துப் போயுள்ளன. இந்த ஆபத்தை எதிர்கொள்ளத் தமிழ்நாடு வனத் துறை 10 ஆண்டுகால நீண்டகால மேலாண்மைத் திட்டத்தை ஆயத்தம் செய்து வருகிறது. முன்னெச்சரிக்கைக் கண்காணிப்பு, பவளப்பாறைகளை மீண்டும் சீரமைக்கும் முறைகள் மற்றும் கடல்சார் சூழல் மண்டலத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் இதன் மூலம் தீவிரப்படுத்தப்பட உள்ளன.