minister muthusamy
minister muthusamy pt desk
தமிழ்நாடு

”கோடம்பாக்கம் புலியூரில் சேதமடைந்துள்ள வீடுகளை தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டலாம்”- அமைச்சர் முத்துசாமி

webteam

கோடம்பாக்கம் புலியூர் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேதமடைந்த வீடுகள் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்குள்ள 428 வீடுகளும் சேதமடைந்துள்ளன. அதனால் இங்குள்ள வீடுகளை சீரமைத்து புதிதாக கட்டித்தர வேண்டும் என்று குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இங்குள்ள வீடுகளை புதிதாக கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்க முடியாது.

இந்த வீடுகளை தனியார் பங்களிப்புடன் மீண்டும் புதிதாக கட்டித் தர அரசு உதவி செய்யும். அதாவது இங்குள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் நல சங்கங்கள் இணைந்து தனியாருடன் ஒப்பந்தம் செய்து செலவு இல்லாமல் புதிய குடியிருப்புகளை கட்டிக் கொள்ளலாம். இருப்பினும் இங்குள்ள 428 வீடுகளில் உண்மையான உரிமையாளர்கள் தற்போது இல்லை. தற்போது அவ்வீடுகளில் இருப்பவர்களிடம் முறையான சான்றிதழ்கள் இல்லை.

இருந்தாலும் இதற்குத் தேவையான சட்ட வழிமுறைகளை கையாண்டு தனியார் பங்களிப்புடன் பழைய வீடுகளை இடித்து கட்ட உரிய உதவிகளை அரசு செய்யும். தனியாருடன் இணைந்து கட்டும் போது தான் இங்கு குடியிருப்போர் பணம் எதுவும் செலுத்தாமல் புதிய வீடுகள் பெறும் நிலை ஏற்படும். இந்த முறையில் வீட்டு வசதி வாரிய சேதமடைந்த குடியிருப்புகள் தனியார் பங்களிப்புடன் தமிழ்நாட்டில் கோவை சென்னை உள்ளிட்ட மூன்று இடங்களில் கட்டப்பட்டு வருகின்றன.

இதில் கோவையில் சிலிண்டர்களை தனியே வீட்டுக்கு வெளியே வைத்துக்கொள்ளும் வசதியுடன் அமைக்கப்படுகிறது. இந்த வீடுகளை தனியாரை விட தரமான, வசதிகள் கொண்ட வகையில் கட்ட வேண்டும். அந்த வகையில் சென்னை புலியூரில் உள்ள வீட்டு வசதி வாரிய சேதமடைந்த 428 வீடுகளும் தனியார் பங்களிப்புடன் மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

இதற்கு குடியிருப்பு வாசிகள் குடியிருப்போர் நல சங்கங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். ஒன்றாக இருந்தால் மட்டுமே புதிய வீடு கட்ட முடியும். இடித்து விட்டு புதிதாக கட்டப்படும் வீடுகள் 80 முதல் 100 ஆண்டுகள் நிலைத்து இருக்கும் வகையில் அமைக்கப்படும். இதற்கு அரசு நிதி ஒதுக்க முடியாது என்பதால் குடியிருப்பு வாசிகளும் தனியாரும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தலாம். அதனை கண்காணிக்கும் பணியை அரசு மேற்கொள்ளும்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 10 இடங்களில் இது போன்று பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்