தமிழ்நாடு

நந்தினி வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டம்

நந்தினி வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டம்

webteam

அரியலூர் அருகே சிறுமி நந்தினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான நான்காவது நபரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி நந்தினியின் சடலம் கடந்த ஜனவரி 14ம் தேதி கீழமாளிகை கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் மீட்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த இரும்புலிக்குறிச்சி காவல்துறையினர், இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். முதலில் கைதான 3 பேரும் ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நான்காவதாக கைதான திருமுருகன் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நட‌வடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சரவணபெருமாள் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் வழங்கினர். சிறுமி நந்தினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேருமே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.