தமிழகத்தில் மேலும் 12,772 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 24வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்துவருகிறது. 1,70,256 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் 12,770, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 2 பேர் என 12,772 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
489 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு:
சென்னையிலும் 3வது நாளாக கொரோனா தொற்று 1000க்கும் கீழ் குறைந்துள்ளது. ஏற்கெனவே 935 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது தொடர்ந்து குறைந்துவருகிறது. ஒரேநாளில் 489 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று 254 பேர் உயிரிழப்பு:
கொரோனாவால் மேலும் 254 பேர் இறந்தநிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29,801ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 146 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 108 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 57 பேர் உயிரிழந்துள்ளனர். 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 56 பேரும் உயிரிழந்துள்ளானர். அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 33 பேர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் 28 பேரும், கோவையில் 27 பேரும், காஞ்சிபுரத்தில் 13 பேரும், சேலம் மற்றும் திருச்சியில் தலா 11 பேரும், மதுரை மற்றும் நாகையில் தலா 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் 1,728 பேருக்கு பாதிப்பு:
பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கோவையில் 1728 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1295 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 796 பேருக்கும், திருப்பூரில் 781 பேருக்கும், தஞ்சையில் 596 பேருக்கும், செங்கல்பட்டில் 522 பேருக்கும், நீலகிரியில் 380 பேருக்கும், திருச்சியில் 378 பேருக்கும், கன்னியாகுமரியில் 364 பேருக்கும், திருவள்ளூரில் 329 பேருக்கும், நாமக்கல்லில் 313 பேருக்கும், ராணிப்பேட்டையில் 293 பேருக்கும், நாகையில் 285 பேருக்கும், கடலூரில் 283 பேருக்கும், விழுப்புரத்தில் 263 பேருக்கும், திருவண்ணாமலையில் 252 பேருக்கும், தூத்துக்குடியில் 250 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 242 பேருக்கும், மதுரையில் 219 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 210 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,36,884 ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 25,561 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 21,99,808 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.