திருப்பதியில் யுடியூப்பில் பார்வையாளர்களை கவரும் மோகத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர், பைக், பட்டாசு உள்ளிட்டவற்றை வைத்து ரயிலை மோத விட்டு வீடியோ எடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சித்தூர் மாவட்டம் ஏர்பேடு பகுதியை சேர்ந்த ராமிரெட்டி என்ற மென்பொருள் நிறுவன ஊழியர், பணம் சம்பாதிக்கும் நோக்கில் யு டியூப்பில் வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளார். அதற்காக அபாயகரமான வகையில் ரயில்வே பாதையில் கேஸ் சிலிண்டர், பைக், சைக்கிள்செயின் உள்ளிட்ட பொருட்களை வைத்து ரயிலில் மோதச் செய்து வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் அந்த வீடியோக்களை யு டியூப்பிலும் பகிர்ந்துள்ளார்.
அவர் செய்த செயல்களால் ரயிலே கவிழக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது காவல்துறையினரிடம் கவனம் பெறவே, அவர் பதிவேற்றம் செய்த வீடியோக்களையே ஆதாரமாக வைத்து அவரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். யு டியூப்பில் பார்வையாளர்களை கவரும் மோகத்தில் அவர் இந்த வீடியோவை எடுத்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.