Cyclone Fengal | Hemachandran புதிய தலைமுறை
தமிழ்நாடு

7 கிமீ வேகத்திலேயே நகரும் புயல்... சுயாதீன வானிலை ஆய்வாளர் சொல்லும் செய்தி என்ன?

புயல் கரையை கடப்பது மேலும், தாமதம் அடைந்து இன்று இரவு 7 மணி அளவில்தான் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் கடந்த சில மணி நேரமாக 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது. சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 190 கிலோமீட்டர் திசையில்தான் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது. மேலும், கரையை கடக்கும்போது மணிக்கு 70-80 கிலோமீட்டர் வேகத்திலும், சில சமயம் 90 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் கரையை பிற்பகலில் கடக்காது தாமதமாகும் என்று சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காரணம்?

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

சென்னையிலிருந்து 190 கிமீ கிழக்கே தென்கிழக்கேயும், புதுச்சேரியிலிருந்து கிழக்கே 190 கிமீ திசையிலும் புயலானது மையம் கொண்டுள்ளது.. இந்த புயலானது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் தொடர்ந்து நடந்துவருகிறது. இது நிலப்பகுதியை அடைய முற்படும்போது அரேபிய உயர் அழுத்தத்தின் தாக்கம் என்பது இருக்கும்.

இதன் காரணமாக நிலப்பரப்பின் அருகே வரும்போது புயலின் வேகம் என்பது மேலும் குறைந்து, கடற்கரை அருகே சிலமணி நேரம் மையம் கொள்வதற்கோ, அல்லது 2 , 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதற்கோ வாய்ப்புகள் உள்ளது.

அப்படி இருக்கும் பட்சத்தில், புயல் கரையை கடப்பது மேலும், தாமதம் ஏற்பட்டு, இன்று இரவு 7 மணி அளவில்தான் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மழைப்பொழிவு மற்றும் காற்றின் வேகத்தில் மாறுதல் இருக்கிறது?

புயல் கரையை கடப்பதில், தாமதம் ஏற்படுவதால் தீவிர மழைப்பொழிவு என்பது சற்று தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் நாளை காலை வரையில் சென்னை, திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம் , காஞ்சிபுரம் உள்ளிட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.. குறுகிய காலத்தில் தீவிர மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.