தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வரும் சூழலில், இந்த மாத இறுதியில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி தமிழகத்திற்கு நல்ல மழையைக் கொடுக்க வாய்ப்புள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்திருக்கிறார்.
சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் அளித்த தகவல்களின்படி, இன்றும், நாளையும் கிழக்கு திசைக் காற்றின் ஊடுருவலால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, வருகிற டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மீண்டும் கிழக்கு திசைக் காற்றினால் மழைக்கான சூழல் ஆரம்பிக்கிறது. இந்த காலகட்டத்தில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன் பிறகு, கடல் சார்ந்த அலைவுகள் சாதகமாக அமைவதால், டிசம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகு அடுத்தடுத்து மழை நிகழ்வுகள் உருவாகி பருவமழை தீவிரமடையும் சூழல் அதிகம் இருக்கிறது. முதலில், 15-ஆம் தேதிக்குப் பின் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும், அதனைத் தொடர்ந்து டிசம்பர் 20-ஆம் தேதி அடுத்த தாழ்வுப்பகுதி உருவாகி சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகளிலும் மழைப்பொழிவை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, வடகிழக்கு பருவமழை காலத்தின் மூன்றாவது புயல் சின்னமாக, ஒரு வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு வங்கக்கடலில் டிசம்பர் 23-ஆம் தேதிக்குப் பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது. இந்தக் கணிப்பின்படி உருவாகும் புயல் சின்னமானது, சமீபத்தில் கடந்து சென்ற 'தித்வா' புயலைப் போலவே தமிழகத்திற்கு நல்ல மழையைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.