சென்னையில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நாளை மறுநாள் ‘மோன்தா’ புயல் உருவாக உள்ளது. வங்கக்கடலின் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த தாழ்வு மண்டலம், நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27 ஆம் தேதி காலைக்குள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் ‘மோன்தா’ புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காக்கிநாடா அருகே வரும் 28ஆம் தேதி தீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
‘மோன்தா’ புயல் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. படகுகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு மீனவர்களுக்கு துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.