வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 300கி மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது புயலின் வேகம் 10 கிமீ-ல் இருந்து 13 கிமீ ஆக அதிரித்துள்ள நிலையில், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த வேகம் இன்னும் சிறிது நேரத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் நாளை பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. முன்னதாக வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாமல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
பின்னர், அடுத்த 3 மணி நேரத்தில் வங்கக் கடலில் புயல் உருவாக இருப்பதாகவும், அது, தற்போது சென்னையில் இருந்து 380 கி.மீ., நாகையில் இருந்து 310 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்திருந்தது.
இந்த புயலுக்கு ஏற்கனவே சவுதி அரேபியா பரிந்துரை செய்த ஃபெங்கல் என்ற பெயர் வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஃபெஞ்சல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. எதனால் இந்த பெயர் மாற்றம், புயலின் தன்மை மாறி இருக்கிறதா போன்ற சந்தேகங்களும் எழுந்தது.
ஆனால், உண்மையில் இவை இரண்டும் வேறு பெயர் இல்லை. இரண்டும் ஒரே பெயர் தான். அதாவது ஆங்கிலத்தில் இந்த பெயரை ஃபெங்கல் என படிப்போம். ஆனால் இதன் உச்சரிப்பு சவுதி அரேபியாவில் ஃபெஞ்சல் எனப்படும். இதுதான் இரு பெயருக்கும் உள்ள வித்தியாசமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.