வடதமிழக கடற்கரைகளில் நிலவிய டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
இலங்கையை ஒட்டி வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், இலங்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்ததில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நேற்று மாலை 5:30 மணி அளவில் வலுவிழந்தது. இது மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று மதியத்திற்குள் படிப்படியாக பலவீனமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் விடுக்கப்பட்டிருந்த அதிகபட்சமான புயல் எச்சரிக்கை விலக்கப்பட்டு, 3ஆம் எண் எச்சரிக்கையாகக் குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் கனமழை எச்சரிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.