கனமழை எச்சரிக்கை pt web
தமிழ்நாடு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. புயலாக வலுப்பெறுமா?

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

வங்கக்கடலில் நவம்பர் 13-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

கனமழை

இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று, நவம்பர் 14-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நவம்பர் 15-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய வானிலை வடமேற்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக நவம்பர் 15 முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் நவம்பர் 12-ம் தேதி இரவுக்குள் கரை திரும்புமாறு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. நவம்பர் 13 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.