பாளையங்கோட்டை உணவுப்பொருளில் நெளிந்த புழுக்கள் pt
தமிழ்நாடு

பாளையங்கோட்டை| முந்திரிப் பருப்பில் நெளிந்த புழுக்கள்.. ஆய்வுக்கு பின் கடைக்கு சீல்!

குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட முந்திரிப் பருப்பில் புழுக்கள் நெளிந்த காட்சிகள் தான் வாடிக்கையாளர்களை அதிர வைத்துள்ளது.. இந்த விவகாரம் குறித்து புகார் பறக்கவே அடுத்த நொடி விரைந்து சென்ற அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு கடைக்கு சீல் வைத்துள்ளனர்...!

PT WEB

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் "நட்ஸ் அண்ட் சாக்கோஸ்" என்ற பெயரில் பேக்கரி செயல்பட்டு வருகிறது..இங்கு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சுடலை முத்து என்பவர் குழந்தைகளுக்கு பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் கிஸ்மிஸ் பழங்கள் என 2,198 ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளார்.

பின்னர், வீட்டிற்குச் சென்ற அவர், முந்திரிப் பருப்பை பிரித்து பார்த்த போது, அதில் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதைத் தொடர்ந்து, உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்த அவர்கள் பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

எந்த தவறும் எங்கள் மீது இல்லை..! - கடை உரிமையாளர்

ஆய்வின்போது, முந்திரி பருப்பு மற்றும் அத்திப் பழங்கள் கெட்டுப்போன நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்தக் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

முந்திரிப் பருப்பில் புழுக்கள் நெளிந்ததை பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கடை உரிமையாளரிடம் விளக்கம் கேட்ட போது, "வாடிக்கையாளர் தான் புகார் அளித்துள்ளார்..உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்..எங்கள் பக்கத்தில் எந்த தவறும் இல்லை" விளக்கம் அளித்துள்ளார்.