தமிழ்நாடு

ஊரடங்கால் கலங்கி நிற்கும் ஸ்பின்னிங் மில் தொழிலாளிகள்

ஊரடங்கால் கலங்கி நிற்கும் ஸ்பின்னிங் மில் தொழிலாளிகள்

webteam

 தொழிற்சாலைகளில் தஞ்சமடைந்துள்ள ஊழியர்கள் பொதுமுடக்கத்தில் தளர்வு அளிக்க ஊழியர்கள் கோரிக்கை நிதி நெருக்கடியால் திணறி வருவதாக உரிமையாளர்கள் கவலை ஒட்டுமொத்த வர்த்தகமும் முடங்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

 கோவையில் தயாராகும் ஜவுளித் தயாரிப்புகளான நூல் மற்றும் துணிகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கோவையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் மில்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களை நம்பி 50  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமுடக்கம் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. தினமும் மூன்று வேளை உணவு என்பதே நிச்சயமற்ற ஒன்றாக இருப்பதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள் ஊரடங்கால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் மில்களிலேயே தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மில் தொழிலாளி சங்கர் கூறும் போது “ தற்போது வரை நிறுவனம் எங்களது அடிப்படைத் தேவைகளை கவனித்துக்கொள்கிறது. ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அவர்களும் பிரச்னையை சந்திப்பார்கள். ஆகவே அரசு விரைவில் ஊரடங்கு விதிகளை தளர்த்த வேண்டும்”என்று கூறினார்.

தொழிலாளர்களின் நிலை இவ்வாறு இருக்க உரிமையாளர்களும் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகவும் வங்கிக்கு கட்ட வேண்டிய கடன், தங்களை நம்பியுள்ள தொழிலாளர்கள், விஷ்வரூபம் எடுத்து நிற்கும் மின் கட்டணங்கள், முடங்கிய தொழிலாளர் நிதியின்மை என பல்வேறு காரணங்களால் செய்வதறியாது திகைத்து நிற்பதாக கூறுகின்றனர் .

ஸ்பின்னிங் மில் நித்தியானந்தன் கூறும் போது “ உரிமையாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி விதிகளை தள்ர்த்த வேண்டும் என்று கூறினார்.

தொழில் துறைகளில் முதன்மையாக இருப்பது நிதி, அடுத்ததாக வங்கிகளின் சலுகைகள், மின்துறை, மற்றும் அரசின் சார்பில் தொழில் வளர்ச்சி குழு அமைத்தல். ஆகவே இவைகளின் பங்களிப்பு இன்றி ஸ்பின்னிங் மில்கள் நிலைபெறுவது கடினம் என்பதால், மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.