மதுரையில் திரையரங்கில் பணியாற்றிய பணியாளர்களுக்காக, நடமாடும் உணவகம் அமைத்து கொடுத்த திரையரங்க உரிமையாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் 60 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. இதில் மதுரை அரசரடி பகுதியில் உள்ள மதி திரையரங்கம் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்தத் திரையரங்கில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் திரையரங்கள் மூடப்பட்ட நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த 20 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் திரையரங்கம் சிக்கலை சந்தித்தது. இதனால் பணியாளர்களின் வாழ்வாதரங்கள் வறுமைக்கு தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனை அறிந்த திரையரங்க உரிமையாளர் திரையரங்கின் முன்பக்கத்தில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிகளின் ஒருபகுதியை அகற்றி அந்த இடத்தில் நடமாடும் மினி சரக்கு
வேனை உணவகமாக மாற்றி பணியாளர்களுக்கு கொடுத்துள்ளார். இங்கு புளிசாதம் , தயிர் சாதம் , தக்காளி சாதம் , வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்டவை 30 ரூபாய்க்கும் , 3 வடை பத்து ரூபாய்க்கும் , சாப்பாடு 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதில் கிடைக்கும் வருமானத்தை உரிமையாளரே சமமாக பங்கிட்டு பணியாளர்களுக்கு வழங்கி வருகிறார். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அங்கு உணவு வாங்கவோ அல்லது சாப்பிடவோ வரும் மக்களுக்கு முக கவசத்தை இலவசமாக வழங்கப்படுகிறது.