ரயில் மோதி விபத்திற்குள்ளான வேன், கேட் கீப்பர் pt web
தமிழ்நாடு

கடலூர் | முரண்பட்ட தகவலை அளிக்கிறதா ரயில்வே நிர்வாகம்? விபத்து நிகழ்ந்தது எப்படி?

கடலூரில் குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன்மீது, சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதி கோரமான விபத்து நிகழ்ந்திருக்கிறது. இருவர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

PT digital Desk

கடலூரில் குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன்மீது, சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதி கோரமான விபத்து நிகழ்ந்திருக்கிறது. படுகாயம் அடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் செம்மங்குப்பம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் இருக்கும் ரயில்வே கேட் மூடப்படாததால் பள்ளிவேன் ரயில்வே ட்ராக்கைக் கடக்க முயற்சித்துள்ளது. அப்போது பள்ளிவேன் மீது ரயில் மோதியதில் கோரமான விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த விபத்தில் தனியார் பள்ளிவேன் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. வேனில் இருந்த குழந்தைகளும் தூக்கிவீசப்பட்டனர்.

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து

விபத்தில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடலூர் மாவட்ட மருத்துவ அதிகாரி புதிய தலைமுறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். பள்ளி வேனை இயக்கிய ஓட்டுநரும் படுகாயமடைந்திருக்கிறார். அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ரயில்வே நிர்வாகம் அளித்திருக்கும் விளக்கத்தில், கேட் கீப்பர் கேட்டை மூடத்தொடங்கியபோது, பள்ளி வாகன ஓட்டுநர்தான் வேனைக் கடக்க அனுமதிக்குமாறு கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படாததால் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக விபத்து நடந்த இடத்தில் குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். அதுமட்டுமின்றி அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் போன்றோர் கேட் கீப்பர் தூங்கியதால்தான் விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி வேனில் பயணித்தவர்கள் விவரம்

மேலும், ஆளில்லாத ரயில்வே கேட் என்பதால் தானியங்கி முறையில் கேட் மூடப்பட சிக்னல் கிடைத்ததா என்பது குறித்தும் ரயில்வே விசாரணை நடத்தி வருவதாகும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரயில்வே எஸ்பி புதிய தலைமுறைக்கு அளித்த தகவலின்படி அந்த பள்ளி வேனில் பயணித்தவர்கள் மொத்தம் ஐந்து பேர் மட்டுமே மூன்று பேர் மாணவர்கள் இரண்டு பேரில் ஓட்டுநர் ஒருவர் உதவியாளர் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு அஜாக்கிரதையாக செயல்பட்ட கேட் கீப்பர் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து கடலூர் எம்பி விஷ்னு பிரசாத் புதிய தலைமுறையிடம் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “ஒரு மீட்டிங்கிற்காக அஸ்ஸாம் வந்திருக்கிறேன். தற்போதுதான் போன் செய்து சொன்னார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்தை தமிழக அரசு வழங்குவதற்கு உண்டான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன். மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன். அவரும் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றுகொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்குவதற்கான அத்தனை நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.