தமிழ்நாடு

பருவமழை எதிரொலி: கடலூரில் பேரிடர் மீட்பு சிறப்பு அதிகாரி ஆய்வு

webteam

கடலூரில் பருவமழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மீட்பு சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங்பேடி ஆய்வு மேற்கொண்டார். 

கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், கடலூர் மாவட்டம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்க ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 1,200 கோடி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கடலூரில் ஓடும் தென்பெண்ணை, கெடிலம், பரவனாறு என‌ 4 ஆறுகளின் கரைகளையும் ரூ.220 கோடி செலவில் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் கரைகளை பலப்படுத்தும் பணிகள் குறித்து திருவந்திபுரம், பெரியகாட்டுப்பாளையம், குறிஞ்சிபாடி, கல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு அதிகாரி ககன்தீப் சிங்பேடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூரில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.140 கோடி செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அத்துடன் என்.எல்.சி நிர்வாகம் சார்பில் ரூ.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிதிகளை கொண்டு அணைகளை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதுமட்டுமின்றி இதர துறைகள் சார்பிலும் ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.