கடலூரில் மூளை பாதிப்புக்குள்ளான சிறுவன் பாவேந்தன், கருணை கொலை செய்ய வேண்டிய நிலையில் இல்லை என மருத்துவக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடலூர் மாவட்டம் சோழத்தரத்தைச் சேர்ந்த திருமேனி என்பவருக்கு பாவேந்தன் என்ற 10 வயது மகன் உள்ளார். வலிப்பு நோயால் மூளை பாதிப்புக்கு ஆளான பாவேந்தனுக்கு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தனர். ஆனால் அச்சிறுவனை குணப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து சிகிச்சையளிக்க போதிய வருமானம் இல்லாததால் மகனை கருணை கொலை செய்ய அனுமதியளிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமேனி வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக 3 பேர் அடங்கிய மருத்துவக்குழுவை அமைத்த நீதிமன்றம், சிறுவனின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
அதன்படி, பாவேந்தனைப் பரிசோதித்த மருத்துவர்கள், தன்னை சுற்றி நடப்பதை சிறுவன் உணர்ந்து கொள்வதால், அவனை கருணை கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். சிறுவனின் பெற்றோருக்கு மாதந்தோறும் நிதியுதவி, மருத்துவ உதவிகள் வழங்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் சிறுவனை குணப்படுத்த முடியாது என்ற அறிக்கையை படித்த நீதிபதிகள் கண் கலங்கினர். இதனால் நீதிமன்றத்தில் பெரும் சோகம் நிலவியது. இதுபோன்ற நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சையளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏன் திட்டம் வகுக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வியை முன்வைத்தனர். இதுதொடர்பாக வரும் 23ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.