ஆசிரியை இடம் மாற்றம் செய்யப்பட்டதை அறிந்த பள்ளி மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு ஒன்று மீண்டும் நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம் ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதை ஏற்க முடியாமல் மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக சாந்தி என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், உடல்நிலை பாதிப்பால், தனது வீடு அருகேயுள்ள ராமநத்தம் அரசு பள்ளிக்கு சாந்தி இடமாற்றம் பெற்றார். இது குறித்து பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் தலைமை ஆசிரியை கூறியதும், அதனை ஏற்க முடியாமல் குழந்தைகள் கதறி அழுதனர். அதனைப் பார்த்த தலைமை ஆசிரியை சாந்தியும் மாணவர்களை கட்டியணைத்து கதறி அழத்தொடங்கினார்.