கடலூர் மாவட்டம்- கணவன், மனைவி மீட்பு
கடலூர் மாவட்டம்- கணவன், மனைவி மீட்பு புதியதலைமுறை
தமிழ்நாடு

”பாசன வாய்க்காலில் எங்க கார் மூழ்குது..காப்பாத்துங்க”.. அதிகாலை 2 மணிக்கு போலீசுக்கு வந்த போன் கால்!

PT WEB

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல்துறையினருக்கு அதிகாலை 2 மணி அளவில் தொலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். ”நாங்கள் நாகர்கோவிலில் இருந்து நெய்வேலி வரும்போது வேப்பூர்- விருத்தாசலம் சாலையில் கோமங்கலம் கிராமம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விட்டது. கார் தண்ணீரில் வேகமாக மூழ்கி வருகிறது. விரைவில் வந்து காப்பாற்ற வேண்டும்” என தொலைபேசியில் பேசிய நபர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம்- கணவன், மனைவி மீட்பு

அப்போது பணியில் இருந்த காவல் துறையினர் எந்த இடம் என விசாரித்த போது காரில் வந்தவர்களுக்கு சரியான இடம் தெரியவில்லை. அவர்கள் பெரிய புதர் பகுதியில் சிக்கி உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் வாட்ஸ் அப் லொகேஷன் அனுப்பியதில் லொகேஷன் காட்டப்பட்ட இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் என்று இருதுறையினரும் அங்கு சென்று சாலையோரம் உள்ள புதரில் தேடிய போது அருகில் உள்ள பாசன வாய்க்காலில் அதிரடியாக இறங்கி பாதி முழுகிய காரில் இருந்த இருவரை மீட்டனர்.

அவரிடம் செய்த விசாரணையில், “எனது பெயர் ரமேஷ். என்.எல்.சி நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். எனது மனைவி பிரபாவுடன் காரில் வந்த போது தூக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து புதரில் காரை இறக்கிவிட்டேன். கார் பாசன வாய்க்காலில் விழுந்து தண்ணீரில் மூழ்க தொடங்கியது. வாய்க்காலில் இருந்து உயிர் தப்பியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று அந்த நபர் தெரிவித்தார்.

அத்துடன், துரிதமாக செயல்பட்ட காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினரை இரு கை கூப்பி நன்றி தெரிவித்தனர் தம்பதியர் இருவரும்.

அப்பகுதியில் இருந்தவர்களுக்கு கார் வாய்க்காலில் விழுந்ததே தெரியவில்லை. காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியதால் காவல்துறைக்கு பாராட்டு குவிந்து வருகிறது.