அடுத்தடுத்த வீட்டின் பூட்டை உடைத்து திருடு போன சம்பவம் கிராமமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள ராமநத்தம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி முத்துச்செல்வி தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகின்றார்.
இந்நிலையில் தனது கணவரின் சொந்த ஊரான வடபாதிக்கு சென்றுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டின் அலமாரி மற்றும் பீரோவில் இருந்த 24 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இவர் வீடு தனி வீடு என்பதால் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் எதுவும் வைக்கவில்லை.
அதேபோல் பக்கத்து தெருவை சேர்ந்த அம்பிகாபதி என்பவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சகுந்தலா மூன்று குழந்தைகளுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார். இவர் தமிழ் வருடப்பிறப்பு அன்று மாலை தாய்வீடான ராமநத்தம் அடுத்துள்ள சித்தூருக்கு சென்றுவிட்டார்.
இன்று முத்துச்செல்வி வீட்டில் திருடு போன தகவல் அறிந்த அக்கம் பக்கத்து வீட்டார் சந்தேகத்துடன் சகுந்தலா தேவியின் வீட்டை பார்த்துள்ளனர். அவரின் வீட்டு கதவு பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை அறிந்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது இவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. சகுந்தலாதேவி பீரோவில் எதுவும் வைக்காமல் மற்றொரு இடத்தில் 3 சவரன் தங்க நகைகளை மறைத்து வைத்துள்ளார். இதனால் அந்த நகை தப்பியது. ராமநத்தம் பகுதியில் அடுத்தடுத்து இரு வீட்டில் திருடு போனதால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.