தமிழ்நாடு

கடலூர்: தாயிடம் பால் பெறமுடியாமல் அவதியுறும் அரையடி கன்றுக்குட்டி

நிவேதா ஜெகராஜா

அரை அடி உயரத்தில் கன்றுக் குட்டியை ஈன்றுள்ளது கடலூர் பகுதியை சேர்ந்த ஒரு பசு. இந்த கன்றுக்குட்டி, உயரம் குறைவாக இருப்பதால், தாயிடம் பால் குடிக்க முடியாமல் தவித்துவருகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நலன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் என்ற விவசாயி. இவர்  வீட்டு பசுவொன்று, மூன்றாவது முறையாக கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இதற்கு குமராட்சி அரசு கால்நடை மருத்துவமனையில் தான் சினை ஊசி போடப்பட்டுள்ளது. அங்குதான் மூன்றாவது கன்று ஈன்றெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த கன்று உயரம் குறைவாக தரையோடு தரையாக தவழ்ந்து செல்லும் அளவுக்குதான் இருக்கிறது. இதனால் தாய் பசுவிடம் பால் குடிக்க முடியாமலும் நடக்க முடியாமலும் தவித்து வருகிறது கன்று. கன்றை பார்த்து கண்ணீர் வடிக்கிறது தாய்ப்பசு. இதனால் பசுவை வைத்திருக்கும் விவசாயி விஜயன் குடும்பத்தினர் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஏற்கெனவே இதே பசு இரண்டு கன்றுகளை ஈன்றபோது சரியான அளவில்தான் கன்றுகள் இருந்துள்ளன. ஒருவேளை தற்போது அரசு கால்நடை மருத்துவமனையில் போடப்பட்ட சினை ஊசியில் ஏதேனும் பிரச்னை இருக்குமா என்ற சந்தேகம் விஜயன் குடும்பத்துக்கு எழுந்துள்ளது. தங்கள் கேள்வியை முன்வைக்கும் அவர்கள், கால்நடை துறை இதில் கவனம் செலுத்தி, இந்தக் கன்று வளர்ச்சியடைய அதற்கான வழிவகைகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்

இந்த கன்றுக் குட்டியை பார்க்க சுற்றுவட்டார பகுதி மக்கள் அந்த பகுதியில் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளனர். குழந்தைகளை விட மிகக் குறைவான உயரத்தில் இருப்பதால் அந்தக் கன்றுக்குட்டி மீது அந்த குடும்பத்தினர் அதிக பாசத்துடன் இருந்துவருகின்றனர்.