தமிழ்நாடு

இருட்டுக்கடை அல்வாவிற்காக அலைமோதும் பக்தர்கள்

இருட்டுக்கடை அல்வாவிற்காக அலைமோதும் பக்தர்கள்

webteam

தாமிரபரணி மகாபுஷ்கர விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், திருநெல்வேலியின் பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வா விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் எதாவது ஒரு உணவு வகைக்கு பிரபலம். அந்த வகையில் திருநெல்வேலி என்றாலே நினைவுக்கு வருவது அல்வாதான். அதுவும் இருட்டுக்கடை அல்வாதான் அனைவரின் பிரியம். திருநெல்வேலி செல்பவர்கள் இருட்டுக்கடை அல்வா இல்லாமல் திரும்புவதே இல்லை. 

இந்நிலையில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மஹா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. பக்தர்கள் நீராடுவதற்காக நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 149 படித்துறைகள் 64 தீர்த்தக்கட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புனித நீராடுவதற்காக உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளிமாவட்ட மக்கள் ,வெளிமாநிலத்தவர்கள் நெல்லையில் குவிந்த வண்ணம் உள்ளனர். 

புஷ்கர நீராடுதலை முடித்துக்கொண்டு வெளிமாவட்ட, வெளிமாநில மக்கள் அடுத்து செல்லும் இடம் இருட்டுக்கடையை நோக்கியே இருக்கிறது. அதிகமான மக்கள் குவிந்து வருவதால் இருட்டுக்கடை முன்பு மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இருட்டுக்கடையில் மாலை 5 மணி முதல் 7 மணிவரை மட்டுமே விற்பனை நடக்கும் என்பதால் இங்கு கூட்டம் அதிக அளவு இருக்கிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த நீண்ட வரிசையில் நிற்கவைக்கப்பட்டு ஒவ்வொருத்தராக அனுப்பப்பட்டு வருகின்றனர்.

135 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்த ஜகன் சிங் என்பவர் தள்ளுவண்டியில் அல்வா விற்க தொடங்கியதாகவும், அதன் ருசி மக்கள் மத்தியில் பரவ ஜகன் சிங்கின் அல்வாவுக்கு தனி மவுசு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அவருடைய வழி தோன்றல்களே தற்போது இருட்டுக்கடையை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்கள்.