Complaint
Complaint pt desk
தமிழ்நாடு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி...

webteam

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளம் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவி பெருமாள் என்பவருடைய மகன் மகாராஜா. பாலிடெக்னிக் டிப்ளமோ பட்டதாரியான இவருக்கு, தனது உறவினர் மூலமாக தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கணேசன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

Fake order

அந்த கணேசன், தன் உறவினரான சிவகாசி அருகே உள்ள மேலாண்மறைநாடு கிராமத்தைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (ஓய்வு) அதிகாரி குருசாமி என்பவரிடம் சொல்லி மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை வாங்கித் தருகிறேன் என்று மகாராஜாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவருடைய தந்தை சஞ்சீவி பெருமாள், தன்னுடைய மகனின் வேலைக்காக கணேசனுடன் சென்று குருசாமியிடம் 1லட்சம் ரூபாயை அட்வான்ஸாக கொடுத்துள்ளார்.

இதையடுத்து பணத்தை பெற்றுக் கொண்ட குருசாமி வேலைக்கான ஆணை கிடைத்ததும் மீதி 3 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில், அவர் கூறியது போல் சஞ்சீவி பெருமாள் வீட்டிற்கு குஜராத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி முகாமில் வேலையில் சேரச் சொல்லி ஆணை வந்துள்ளது. இதையடுத்து சஞ்சீவி பெருமாள் மீதமுள்ள 3 லட்சம் ரூபாயை குருசாமிடம் கொடுத்துள்ளார்.

Fake letter

இதைத் தொடர்ந்து வேலைக்கான ஆணையுடன் தனது மகனை அழைத்துக் கொண்டு குஜராத் சென்றுள்ளார் அவர். குஜராத்தில் இறங்கியதும், சஞ்சீவி பெருமாளை தொடர்பு கொண்ட குருசாமி அந்த வேலை ஆணை கேன்சல் ஆகிவிட்டதாகவும், கேரள மாநிலம் பையனூருக்கு வேலைக்கான ஆணை வந்துள்ளதாகவும் கூறி திரும்ப வர வைத்துள்ளார். பின் பையனூர் வேலைக்கான ஆணையை கொடுத்துள்ளார்.

அதைப் பெற்றுக் கொண்டு சஞ்சீவி பெருமாள் தனது மகனுடன் கேரளாவிற்கு சென்றபோது, மீண்டும் அவரை தொடர்பு கொண்ட குருசாமி, அந்த வேலைக்கான ஆணையும் கேன்சல் ஆகிவிட்டது, சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான தபால் வந்ததும் அங்கு சென்று பணிக்கு சேர்ந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.

Fake letter

இந்நிலையில், அவர் கூறியபடியே சஞ்சீவி பெருமாள் வீட்டிற்கு சென்னை ஆவடி பயிற்சி மையத்திலிருந்து வேலைக்கான ஆணை வந்துள்ளது. அதைப் பெற்றுக் கொண்டு சஞ்சீவி பெருமாள் தனது மகனுடன் அங்கு சென்று ஆணையை கொடுத்த போதுதான் அது போலியான வேலைக்கான ஆணை என்பது தெரிய வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சஞ்சீவி பெருமாள் கணேசனை அழைத்துச் சென்று குருசாமிடம் கேட்டுள்ளார்.

அப்போது 'உங்களை யார் என்றே எனக்குத் தெரியாது' என்று கூறியது மட்டுமின்றி அவர்களை அவதூறாக பேசி வெளியே அனுப்பியுள்ளார். இதையடுத்து குருசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசனிடம், சஞ்சீவி பெருமாள் புகார் மனு அளித்துள்ளார். இதேபோன்று குருசாமி தங்களிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலைக்கான போலி ஆணையை வழங்கி பணத்தை ஏமாற்றி உள்ளதாக கழுகுமலை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த முனியாண்டி, கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கச் செல்வி, பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவாஷ் ஆகியோரும் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

DSP Office

மேலும் இவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட கணேசன், கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கணேசன் மூலமாக 21 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி குருசாமி ஏமாற்றியுள்ளதாகவும், பணம் கொடுத்தவர்கள் கணேசனை கேட்பதால், கணேசன் தற்போது ஊரில் இருக்க முடியாமல் வெளியூர்களில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கணேசன் மூலமாக மட்டுமின்றி, சிவகாசி பகுதியில் குருசாமி இதுபோன்று பலர் மூலமாகவும் போலி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. குருசாமியிடம் சுமார் 41 பேர் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும், சுமார் 2 கோடி ரூபாய் வரை குருசாமி ஏமாற்றியுள்ளதாகவும் புகார் அளிக்க வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புகார்கள் குறித்து ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி குருசாமியை தொடர்பு கொண்ட போது அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை.