தமிழ்நாடு

மனிதக்கழிவுகள் அள்ளும்பணி; உயிரிழப்பை தடுக்காதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை -நீதிபதிகள்

மனிதக்கழிவுகள் அள்ளும்பணி; உயிரிழப்பை தடுக்காதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை -நீதிபதிகள்

webteam

தமிழகத்தில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் பலர் உயிரிழந்து வருவதை தீவிரமாக அணுக வேண்டும் என்றும் இதனை தடுக்க முறையாக தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில்  மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் துப்புரவு பணியாளர்கள் எவ்வித உபகரணங்கள் இல்லாமல் மனிதக்கழிவுகளை அகற்றிவருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கைகளால் மலம் அள்ளுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வீடு கட்டித்தர இடம், நிதி உதவி, குழந்தைகளுக்கு கல்வி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த வசதிகளை பெற மனித கழிவுகளை அகற்றுபவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 169 பேர் மனித கழிவுகள் அகற்றும் பணியை செய்து வருகின்றனர்.இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவில்லை. எனவே, அடையாளம் காணப்பட்டுள்ள மனிதக்கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், கைகளால் மனிதக்கழிவுகளை அகற்றுவோர்களை கணக்கெடுக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என  குறிப்பிட்டு இருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, “தமிழகத்தில் மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் பலர் உயிரிழந்து வருவதை தீவிரமாக அணுக வேண்டும். இதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு 2017-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என 2018-ல் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.  ஆகையால் ஜூலை 7-க்குள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செயலர், நகராட்சி நிர்வாக மண்டல ஆணையர், மதுரை, விருதுநகர் ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர்  பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.