தமிழ்நாடு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

webteam

விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை குலுக்கல் குறிச்சியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமார் 70க்கும் மேற்பட்ட அறைகளும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணி செய்து வருகின்றனர். 

இன்று பட்டாசு ஆலையில் காலையில் வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலையின் 69வது அறையில் அம்மையார் பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ், முருகன் குறிச்சி சேர்ந்த முருகேசன் ஆகியோர் அணுகுண்டு தயாரிக்க தேவையான மருந்துகளை அளவில் செய்து கொண்டிருந்தனர். 

அப்போது, எதிர்பாராதவிதமாக வெடி மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த இரண்டு ஊழியர்களும் உடல் சிதறி பலியாகினர். இந்தச் சம்பவம் அறிந்து வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். அத்துடன் உடல் சிதறி இறந்த 2 பேரின் உடல்களை சேகரித்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.