சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்கக் கோரி சிவகாசியில் 10வது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடர் வேலைநிறுத்ததால் 135 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றில், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசு குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், பட்டாசுக்கு தடைவிதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் வியாபாரிகள் ஆர்டர்களை குறைத்துவிட்டனர். அதனால், சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க வலியுறுத்தி கடந்த 26 ஆம் தேதியிலிருந்து வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தினால், 4 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசுக்கு தடைகோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வருவதால், அதன் அடிப்படையிலேயே அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.