தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களை வென்று தவெக தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காத நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. முதலில் வெளியில் இருந்து ஆதரவு என தெரிவித்த ஐயூஎம்எல் மற்றும் விசிக தற்போது அமைச்சரவையில் பங்கேற்று இருக்கிறது.
அதேசமயம், தவெக ஆட்சி அமைக்க தாங்கள் தான் தங்களது கூட்டணி கட்சிகளை அனுப்பி வைத்ததாக திமுக கூறிவந்த நிலையில், அக்கருத்தை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மறுத்திருக்கின்றனர். மேலும், ஐயூஎம்எல் பல தசாப்தமான திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கிறது. சிபிஐ-யும் திமுக கூட்டணியில் தாங்கள் இல்லை என தெரிவித்திருக்கின்றன.
இந்தசூழலில் தான், சிபிஎம்-ன் நாளிதழான தீக்கதிரில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது ஏன்? என்பது குறித்து விளக்கியிருந்தார். அதில், குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தடுத்தபதற்காகவே தவெகவுக்கு ஆதரவளிப்பதாகவும், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதை தடுத்திருக்கிறோம் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் படி, திமுக நாளிதழில் நேற்று வெளியான ஒரு கட்டுரையில், குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதை தடுப்பதற்காகவே தவெகவுக்கு ஆதவளித்தோம் என பெ. சண்முகம் கூறுவது பம்மாத்து. சண்முகத்தின் உண்மையான நோக்கம் தமிழகத்தின் திராவிட கட்சிகள் இல்லாத ஒரு ஆட்சியை அமைக்க வேண்டியதே. அதனால் தான், தவெகவை விழுந்தடித்துப் போய் ஆதரித்துள்ளனர். சி.வி. சண்முகமும், பெ. சண்முகமும் ஒரே நேர்கோட்டில் தான் இருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தசூழலில் தான், முரசொலியின் கட்டுரைக்கு பதிலளிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திமுக வெளியில் வேறு, உள்ளே வேறு; பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய் மார்க்ஸிஸ்ட்டுக்கு எப்போதும் இல்லை என காட்டமான பதிலடியைக் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து, வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், முரசொலியில் வெளியான கட்டுரையை எழுதிய எழுத்தாளரும், திராவிட இயக்க ஆய்வாளருமான ப. திருமாவேலனை குறிப்பிட்டு, முரசொலியில் வன்மைத்தக் கக்கியுள்ள திருமாவேலன், மார்க்சிஸ்டுகளுக்கு தத்துவப்பாடம் எடுக்க வேண்டாம். முடிந்தால் திமுகவுக்கு எடுக்க வேண்டும் என விமர்சிக்கப்பட்டிருக்கிறது.