ஒருமாதம் வாக்குப்பெட்டியை பாதுகாப்பது என்ன நடக்குமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார் கே.பாலகிருஷ்ணன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''மக்கள் எழுச்சியோடு வாக்களித்து வருகிறார்கள். இதனை பார்க்கும்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகிறது. தமிழத்தில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்களுடைய இந்த எழுச்சியை தாங்க முடியாத ஆளுகின்ற அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியினர் சரளமாக பணப்பட்டுவாடா செய்துள்ளனர்.
அந்த பணபலத்தை முறியடித்து திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கு பின் முடிவுகளை அறிய ஒருமாதம் காத்திருக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இறுதிக் கட்டமாக நடத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஒரு மாத காலம் இந்த வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பது என்பது அதில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தல்களிலாவது இந்த நிலை மாற வேண்டும்'' என்றார்.