தமிழ்நாடு

கொக்கிப் புழு தாக்குதலால் அடுத்தடுத்து உயிரிழக்கும் மாடுகள்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொக்கிப் புழு தாக்குதலால் அடுத்தடுத்து உயிரிழக்கும் மாடுகள்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை

webteam

சீர்காழி அருகே கொக்கிப்புழு தாக்குதலால் மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை மற்றும் பம்புசெட்டு நீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் புற்களை சாப்பிடும்போது அதிலிருந்து கொக்கி புழுக்கள் மாட்டின் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

முதலில் மாட்டின் குடலுக்குள் செல்லும் கொக்கி புழுக்கள் தாடை வீக்கத்தை ஏற்படுத்துவதுடன் தொடர்ந்து அந்த மாடுகளின் ஈரலை பாதிக்கிறது. இதனால் அப்பகுதியில் மாடுகள் அடுத்தடுத்து உயிரிழப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கொள்ளிடம் அருகே உள்ள சாமியும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சரவணன் என்பவரது இரண்டு மாடுகள் கொக்கிப்புழு தாக்குதலுக்கு ஆளாகி இறந்துள்ளன. மேலும் சில மாடுகள் இதே நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் முத்துக்குமாரசாமி தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டதுடன் இது தொற்று நோய் அல்ல எனவும் கொக்கிப்புழு தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த மாடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர். எனினும் இந்த கொக்கி புழு தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த கால்நடை மருத்துவத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.