கன்றுக் குட்டியை பிரித்து செல்வதாக நினைத்து இருசக்கர வாகனத்தின் பின்னே பசு இரண்டு கிலோ மீட்டர் தூரம் தூரத்திச் சென்ற சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தை சேர்ந்தவர் சுசீலா. இவர் தனது வீட்டில் மூன்று பசுக்களை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்ற பசுவில் ஒன்று ஊரின் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கன்று ஒன்றை ஈன்றுள்ளது. பசு கன்று ஈன்றதை அடுத்து கணேசன் என்பவர், கன்றுக் குட்டியை பாதுகாப்பதற்காக அதனை தனது இருசக்கர வாகனத்தில் வைத்து கட்டி சுசீலா வீட்டிற்கு கொண்டு சேர்க்க முயற்சித்துள்ளார்.
ஆனால் புதிய நபர் தனது கன்றுக்குட்டியை தூக்குவதை பார்த்த பசு, கன்றை பிரிய மனமில்லாமல் அவரை வழிமறித்துள்ளது.
அதையும் தாண்டி கணேசன் கன்றுக்குட்டியை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றபோது அவருக்குப் பின்னாலேயே பசு கன்றுக்குட்டியை முகர்ந்தவாறு ஓடி வந்தது. இவ்வாறு இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கன்றுக் குட்டியை பின்தொடர்ந்து பசு ஓடிவந்த காட்சி காண்போரை நெகிழ வைத்தது.
ஒருவழியாக சுசிலாவின் வீட்டில் கணேசன் கன்றுக்குட்டியை ஒப்படைத்த பின்பு தனது கன்றை ஆரத்தழுவிய பசு உச்சி முகர்ந்து கொஞ்சி விளையாடியது. இந்தக் காட்சி காண்போருக்கு பூரிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் சுசிலா கூறும்போது, “கன்று பிறக்கப் போவது தெரியாமல் பசுவை இன்று காலை மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டேன். அதன் பின்பு காட்டுப் பகுதியில் தனது பசு கன்று ஈன்று உள்ளதாக வந்த தகவலை அடுத்து கன்றுக் குட்டியைத் தூக்கி வருமாறு கணேசன் என்பவரை அனுப்பி வைத்தேன். அவர் புது நபர் என்பதால் பசு பின்தொடர்ந்து ஓடி வந்து உள்ளது” என்று கூறினார்.