பழனி அருகே விவசாயி ஒருவரின் மாடு நாய்கள் குரைத்ததால் மிரண்டு பாதாள கிணற்றில் விழுந்தது.
பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சார்ந்த விவசாயி சுந்தரம் என்பவரின் பசு, கன்று ஈன்ற நிலையில் இருந்தது. இரவு நேரத்தில் அப்பகுதியில் இருந்த நாய்கள், குரைக்கத் தொடங்கியுள்ளன. நாய்களின் சத்தம் கேட்டதில் மிரண்ட பசு, தலைதெறிக்க ஓடத்தொடங்கியுள்ளது. அவ்வாறு ஓடிய பசு, அப்பகுதியில் இருந்த பாதாள கிணறு ஒன்றில் தவறி விழுந்துள்ளது.
பசுவின் சத்தம் கேட்டு விவசாயி சுந்தரம் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் ஓடிச்சென்று கிணற்றை எட்டிப் பார்த்துள்ளனர். கிணற்றில் தண்ணீர் இருந்ததால், பசு பெரிதளவில் காயங்கள் இன்றி நீந்தியுள்ளது. இருப்பினும் கன்று ஈன்ற பசு என்பதால், நீண்ட நேரம் ஆக அதனால் நீந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பசுவை மீட்க சுந்தரம் மற்றும் அவரின் மனைவி முயற்சி செய்துள்ளனர். அவர்களால் முடியாததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு கயிறு கட்டி பசுவை மீட்டுள்ளனர். அவர்களுக்கு சுந்தரத்தின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.