தமிழ்நாடு

மின்கம்பி அறுந்து விழுந்து மாடு பரிதாப பலி

மின்கம்பி அறுந்து விழுந்து மாடு பரிதாப பலி

webteam

சேலத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த மாடு பரிதாபமாக உயிரிழந்தது. 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பண்ணபட்டி கிராமம், மாரகவுண்டன்புதூர், வி.வி.தோட்டத்தில் வசிப்பவர் நடராஜன். சுமார் 70 வயது நிரம்பிய இவர் வங்கியில் கடன் வாங்கி ஒரு பசு மாடு வாங்கி வளர்த்து வருகிறார். இந்த மாடு கடந்தாண்டு ஒரு கன்று ஈன்றுள்ளது. இதனை தொடர்ந்து நடராஜன் பால் கறந்து ஜீவனம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பால்மாடு மீண்டும் கர்ப்பமாகி தற்போது ஐந்துமாத கர்ப்பிணியாக உள்ளது. ஓமலூர் வட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. அதனால், இந்த மாடு சரியாக உணவு எடுக்காமல் படுத்திருந்துள்ளது. இன்று காலையில் மழை பெய்யாததால் மாட்டை வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் மேய்ச்சளுக்ககாக நடராஜன் கட்டியுள்ளார். 

மாடு தோட்டத்தில் மேய்ந்துகொண்டு இருந்தபோது, வயலில் இருந்த மின்சார கம்பத்தின் மின்கம்பி அறுந்து மாட்டின் மீது விழுந்தது. அதிக அழுத்தம் கொண்ட மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசிப்பட்ட மாடு வயலிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து மாட்டை காப்பாற்ற முற்பட்டனர். ஆனால், மின்சாரம் பாய்ந்த நிலையில் பொதுமக்கள் யாரும் தோட்டத்தில் இறங்காமல் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வந்த மின்சார வாரிய பணியாளர்கள், மின் இணைப்பை துண்டித்தனர். அத்துடன் அறுந்து விழுந்த மின்சார கம்பியை அகற்றிவிட்டு புதிய கம்பியை கம்பத்தில் இனைத்தனர். 

இதனிடையே பசுமாடு இறந்தது குறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கே வந்த கால்நடை மருத்துவர் இறந்த மாட்டை சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வுகள் செய்தார். அதிக அழுத்தம் கொண்ட மின்சாரம் தாக்கியதாலேயே பசு மாடும், மாட்டின் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டியும் ஒரே நேரத்தில் இறந்து விட்டதாக அவர் தெரிவித்தார். மாட்டின் கன்றுக்குட்டி, தாய் மாடு இறந்த சோகத்தில் உணவு உண்ணாமல் கண்ணீருடன் படுத்த நிலையிலேயே இருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.