தமிழ்நாடு

கார்டே இல்லாமல் ரூ.4.31 லட்சத்தை ஏடிஎம் மூலம் பறிகொடுத்த பெண்!

கார்டே இல்லாமல் ரூ.4.31 லட்சத்தை ஏடிஎம் மூலம் பறிகொடுத்த பெண்!

webteam

வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4.31 லட்சம் பணத்தை கோவைப் பெண் பறிகொடுத்துள்ளார்.

கோவை குனியமுத்தூரை சேர்ந்த பெண் உசேன் பீபி. இவர் இந்தியன் வங்கி கணக்கில் வாடிக்கையாளராக உள்ளார். கடந்த மே மாதம் தனது வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது பீபியின் கணக்கில் இருந்த ரூ.4.31 லட்சம் பணமும் எடுக்கப்பட்டுவிட்டதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தனது கையொப்பம் இல்லாமல் பணத்தை எப்படி எடுக்கமுடியும் என பீபி கேள்வி எழுப்பியுள்ளார். சரி.. இரண்டு நாட்களுக்கு பின்னர் வாருங்கள் பரிசோதித்துவிட்டுச் சொல்கிறோம் எனக்கூறி வங்கி ஊழியர்கள் பீபியை அனுப்பியுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு பின்னர் சென்று கேட்டபோது, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஏடிஎம் கார்டு மூலம் அனைத்து பணமும் எடுக்கப்பட்டுவிட்டதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு “என்னிடம் தான் ஏடிஎம் கார்டே இல்லையே” பின்னர் எப்படி பணத்தை எடுக்க முடியும் என பீபி கேள்வி எழுப்பியுள்ளார். ஏதேனும் மோசடிக்கும்பல் போலி ஏடிஎம் கார்டு மூலம் எடுத்திருப்பார்கள் என வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. அத்துடன் அதுதொடர்பாக தாங்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பியுள்ளது.

ஆனால் ஒரு மாதம் ஆகியும் வங்கி தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பணம் பறிபோனது தொடர்பாக கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பீபி புகார் அளித்துள்ளார். அத்துடன் வங்கி ஊழியர்கள் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கூறிய பீபி, தான் கடந்த மாதம் மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே இருக்கும் இடைத்தரகர் ஒருவரிடம் விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்ய தனது வங்கி அட்டையை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அதை பின்னர் பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார். அதனால் அந்த நபர் மீதும் சந்தேகம் இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.