Death File Photo
தமிழ்நாடு

கோவை | சாமி தரிசனம் செய்ய வெள்ளியங்கிரி மலைக்கு வந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்

கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த 15 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: பிரவீண்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கு நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மழையேற்றம் செய்து சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்தனர். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் விசுவா தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் சாமி தரிசனம் செய்து விட்டு இறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது மூன்றாவது மலைக்கு வந்த போது விசுவா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து டோலி கட்டி தூக்கி வரும் ஊழியர்கள் உதவியுடன் சிறுவனை கீழே கொண்டு வந்து பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்ற தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தின் காரணமாக நெரிசலில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதா? அவருக்கு வேறு ஏதேனும் இணை நோய்கள் இருந்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.