Vijay pt desk
தமிழ்நாடு

விஜய் வருகையால் கோவையை ஸ்தம்பிக்க வைத்த தொண்டர்கள்.. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஆகியவை தொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய், தனி விமானம் மூலம் நேற்று கோவை வந்தடைந்தார். அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் திரண்டனர். இதனால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் விமான நிலைய வளாகத்தில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களையும் நிறுத்திவிட்டுச் சென்றனர்.

குறிப்பாக, முன்பே திட்டமிடப்படாத ரோடு ஷோவால் அப்பகுதியே ஸ்தம்பித்தது. நேற்று முழுவதும் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பீளமேடு காவல்துறையினர் இரு பிரிவுகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை மாவட்ட செயலாளர் சம்பத் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை விமான நிலையத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் அதிக அளவில் மக்களைத் திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது தவிர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நடப்பட்டு இருந்த திமுக கொடியினை சேதப்படுத்தியதாகவும், ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், நடிகர் விஜய் ரசிகர்களான திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் ஆகிய இருவர் மீதும் இரு பிரிவுகளில் பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது தவிர தவெக தலைவர் விஜயின் காரை பின் தொடர்ந்து வந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய 133 வாகனங்கள் மீதும் போக்குவரத்து விதிமுறைகளின் படி வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தின கருத்தரங்கைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்றைய தினம் தொடர்ந்து கருத்தரங்கு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.