தமிழ்நாடு

நண்பரைக் காண தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குச் சென்ற நபர் : கைது செய்த போலீசார்!

webteam

கோவையில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் முகக்கவசமின்றி நடமாடிய தமுமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, சுகாதாரத்துறை அவர்களை கண்காணித்தும் வருகிறது. கோவை மாநகரில் மட்டும் 9 பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதில், 90 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் வசந்தம் நகர் பகுதியில் சீல் வைக்கப்பட்ட பகுதிக்கு நண்பரை காண, கிணத்துக்கடவு தொகுதி தமுமுக நிர்வாகி பெரோஸ்கான் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் விசாரணை நடத்திய குனியமுத்தூர் போலீசார் கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட அவரின் வீட்டிற்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தியும் பெரோஸ்கான் சென்றதாக தெரிகிறது. மேலும், முகக்கவசமின்றி, 1 மணியுடன் விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டை கடந்து வீதிகளில் சுற்றி வந்ததையடுத்து, பெரோஸ்கான் மீது 144 தடை உத்தரவை மீறுதல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.