தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் சுவர் இடிந்த வழக்கு: நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க ஆணை

மேட்டுப்பாளையம் சுவர் இடிந்த வழக்கு: நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க ஆணை

webteam

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில், நில உரிமையாளர் மற்றும் அரசு அதிகாரிகளை எதிர் மனுதாரராக சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 2-ஆம் தேதி 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில் நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விதிகளை மீறி சுற்றுச்சுவர் எழுப்ப அனுமதித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மாநிலம் முழுவதும் உள்ள தீண்டாமை சுவர்களை கண்டறிந்து அகற்ற வேண்டும் எனவும், வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், தீண்டாமை சுவர் என கூறப்படும் அந்த சுற்றுச்சுவர் மற்றும் குடிசைகள் பட்டா நிலத்தில் அமைக்கப்பட்டதா அல்லது ஆக்கிரமிப்பா என்றும் சுற்றுச்சுவர் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அமைக்கக் கூடாது என விதிகள் உள்ளதா ? எனவும் கேள்வி எழுப்பினர். 

மேலும், இந்த வழக்கில் நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.