போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி 4 மாநிலங்களில் கொள்ளையடித்து வந்த கும்பலை காவல்துறையினர் திறமையாக செயல்பட்டு கைது செய்தனர்.
கடந்த ஜூன் 6ஆம் தேதி கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வங்கி ஏடிம்மில், பணம் எடுத்த வாடிக்கையாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கில் இருந்து சுமார் பத்தொன்பது லட்சம் வரை திருடப்பட்டது. இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி மண்டல மேலாளர் தங்களது ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு நூதன முறையில் பணம் திருடப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையினரிடம் புகார் மனுவை அளித்தார். இந்த மோசடியை கண்டுபிடிக்க மாநகர காவல்துறையினர் தனிப்படை அமைத்து புலன் விசாரணை நடத்தி வந்தனர்.
முதல் கட்டமாக பணம் மாயமாகும் வங்கி ஏடிஎம்மை ஆய்வு செய்த காவல்துறையினர், வங்கி ஏடிஎம்-ல் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட நபர்களின் புகைப்படங்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சைபர் கிரைம் காவலர்கள் உதவியுடன் பணம் எவ்வாறு திருடப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்தனர். ஸ்கிம்மர் கருவியில் பதிவான தகவலை தங்கள் லேப்டாப்புகளில் ஏற்றிக்கொள்ளும் நூதன திருடர்கள், மைக்ரோ டேட்டாக்கள் மூலம் போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து மற்ற ஏடிஎம்களில் பணத்தை திருடிவந்துள்ளனர். இதனைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அவர்கள் ஒரே பகுதியில் திருடாமல் பல இடங்களுக்கு மாறி மாறிச்சென்று திருடியதால், திருடர்களைப் பிடிப்பதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு ஏடிஎம்-ல் அந்தக் கும்பல் பணம் எடுப்பதை அறிந்த காவல்துறையினர் உடனே அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கிருந்த உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த அக்கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த தமிழரசன், வாசிம், சென்னையை சேர்ந்த நிரஞ்சன், இலங்கை சேர்ந்த அகதி லவசாந்தன், திருச்சியை சேர்ந்த கிஷோர், திருப்பூரை சேர்ந்த மனோகரன் என்பது தெரியவந்தது.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலும் அவர்கள் ஸ்கிம்மர் கருவி மூலம் பணம் கொள்ளையடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து பி.எம்.டபுள்.யு மற்றும் இன்னோவா என இரண்டு கார்கள், இரண்டு லேப்டாப்கள், ஒரு கார்டு ரீடர், செல்போன்கள், இருபது போலி ஏடிஎம் கார்டுகள் மற்றும் நாற்பது கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
(தகவல்கள் : சுரேஷ்குமார், புதிய தலைமுறை செய்தியாளர், கோவை)