தமிழ்நாடு

பதற வைக்கும் 65 அடி உயர செங்குத்துப் பாலம்: மிரளும் மக்கள்!

webteam

கோவையில் புதிதாக கட்டப்படும் 65 அடி உயர செங்குத்தான பாலம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. 

கோவை காந்திபுரம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2014ஆம் ஆண்டு 160 கோடி ரூபாயில் இரட்டை அடுக்கு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதில் முதல் அடுக்கான, நஞ்சுசப்பா சாலையில் இருந்து சத்தி ரோடு ஆம்னி பேருந்து நிலையம் வரையிலான மேம்பாலம் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது. இந்த பாலத்தின் கீழ்பகுதியில், வெளியூர் மற்றும் உள்ளூர் பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த பேருந்து நிலையங்களே பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி என்பதால், பாலத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 

இந்நிலையில் இந்த பாலத்துக்கும் மேல் இரண்டாவது அடுக்காக மற்றோரு பாலம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. காந்திபுரம் நூறடிசாலை 5வது வீதியில் இருந்து, சின்னசாமி சாலை மின் மாயானம் வரை 90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம், 65 அடி உயரத்திற்கு செங்குத்தாக உள்ளது. மிகவும் குறுகலாகவும் மற்றும் உயரமாகவும் கட்டப்படும் இப்பாலம், பார்ப்பதற்கு ஒரு சூசைடு பாயிண்ட்டை போல காட்சியளிப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த மேம்பாலத்தில் பேருந்துகள் பயணிக்க முடியாத நிலையில், அது முற்றிலும் பயனற்று போகும் எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.