கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட தாயை கைது செய்ய வேண்டாம் எனக் கண்ணீர் மல்க சிறுமி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் போகம்பட்டி பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் அளவிடு செய்யும் பணிக்கு அதிகாரிகள் வந்திருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படாத சூழலில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது, ஏற்கனவே அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரத்தில் ஏறி பெண் ஒருவர் போராட்டம் நடத்தினார்.
அவரைச் சமரசப்படுத்தி கீழே இறக்கிய போது அப்பெண் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனது தாயை கைது செய்ய வேண்டாம் எனக் கூறி சிறுமி கண்ணீர் மல்க காவல்துறையினரிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து, யாரையும் கைது செய்யவில்லை என அதிகாரிகள் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.