செய்தியாளர்: பிரவீண்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசீப் முஸ்தகின். இவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக கடந்த 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவரும் மற்றொரு கைதியான அப்துல் சலீம் என்பவரும் நேற்று சிறையில் இருந்த காவலர்கள் அழகர்சாமி, வாசுதேவன் ஆகியோரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகின்றது.
இதையடுத்து தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் இருவரும், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக மத்திய சிறை ஜெயிலர் மனோரஞ்சிதம் கொடுத்த புகாரின் பேரில் சிறைக் கைதிகள் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக் கைதிகள், காவலர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.