தமிழ்நாடு

கரூர் நீதிமன்றத்தில் நாளை முகிலனை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

Rasus

சமூ‌க செயற்பாட்டாளர் முகிலனை கரூர் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்துமாறு சிபிசிஐடிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, ரயிலில் புறப்பட்ட முகிலன் காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், 140 நாட்களுக்குப் பிறகு, திருப்பதி ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தியதாக முகிலனை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், முகிலன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, காட்பாடியில் வைத்து தமிழக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னை அழைத்துவரப்பட்ட அவரிடம் சிபிசிஐடி போலீஸார் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கரூரில் அளிக்கப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக முகிலன் கைது செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நீதிபதி வீட்டில் அனுமதிக்கப்பட்ட முகிலனை, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்க நீதிபதி உத்தரவிட்டார். இருநாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முகிலன், எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தன் தரப்பு வாதத்தை கேட்குமாறு முகிலன் கோரிக்கை விடுத்தார். ஆனால், முகிலன் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் கரூர் என்பதால் அங்கு அவரை ஆஜப்படுத்த நீதிபதி ரவி, சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். தனக்கு உணவு, மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும் என முகிலன் கோரிக்கை விடுத்ததையடுத்து, அதனையும் ஏற்பாடு செய்ய நீதிபதி ஆணையிட்டார். முன்னதாக முகிலன் பலத்த பாதுகாப்போடு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.