தமிழ்நாடு

ஆன்லைன் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு 

webteam

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

2018-2019 ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கானத் தேர்வு குறித்து, ஜூன் 12ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. 

இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்ற பட்டதாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தா‌ர். அதில், கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை மட்டுமே ஆன்லைனில் நடத்தவும், கணினி பயிற்சி இல்லாத பிற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. 

தேர்வுகளை அச்சுத்தாள் நடைமுறையில் நடத்த உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், இதுகுறித்து ஜூலை 24 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்.