தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படும் என நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குனர் எழுத்துபூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனு தொடர்பாக தமிழக அரசிடம் கூடுதல் விபரங்கள் பெற அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் ஆஜராகி, இந்தியாவில் நவோதயா பள்ளிகளில் பயின்ற 14 ஆயிரத்து 185 மாணவ, மாணவிகளில் நீட் தேர்வு எழுதி 11ஆயிரத்து 875 பேர் வெற்றிப்பெற்றனர் என்று தெரிவித்தார். இவர்களில் 7000-த்திற்கும் அதிகமானோர் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். கிராமப்புற மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என்றும் புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் தெரிவித்தார்.
இதையடுத்து தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படும் என்று நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குனர் எழுத்துபூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக கொள்கை முடிவெடுப்பது குறித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 11ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.