தமிழ்நாடு

டிடிவி தினகரனுக்கு தகுதி இல்லை: ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் பேட்டி

டிடிவி தினகரனுக்கு தகுதி இல்லை: ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் பேட்டி

Rasus

டி.டி.வி தினகரனுக்கு கட்சிப் பொறுப்பு வகிக்க தகுதியில்லை என்றும், டி.டி.வி. தினகரன் தலைமையை ஏற்க முடியாது எனவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.

புதிய தலைமுறைக்கு தொலைபேசி மூலம் பிரத்யேகப் பேட்டியளித்த அவர், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் தேவை என வலியுறுத்தினார். ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை கடன் வாங்கிக் கட்டுவோம் என்று கூறிய அவர், போயஸ் கார்டன் இல்லத்திற்கு உரிமையாளர்கள் தானும், தீபாவும்தான் என்று தெரிவித்தார். இருப்பினும், சசிகலா போயஸ் கார்டன் இல்லத்தில் இருப்பது குறித்து கவலையில்லை என்றும் அவர் கூறினார்.

சகோதரி தீபாவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறிய அவர், தீபாவின் அரசியல் ஆர்வத்திற்கு தனது ஆதரவு இல்லை என்றும் தெரிவித்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்தால், அனைத்தும் தெரி‌ய வரும் என்ற அவர், அதிமுக உடையாமல், ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார்.

அதிமுக உடைவதில், யாருக்கும் விருப்பம் இல்லை என்ற தீபக், பன்னீர்செல்வம் அதிமுக தலைவராக வந்தாலும் பரவாயில்லை; கட்சி உடையக் கூடாது என்பதே முக்கியம் என்றார். பன்னீர்செல்வம் கட்சிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்த‌ தீபக், பன்னீர்செல்வம் விரும்பினால், கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்படு‌ம் என்றும் கூறினார்.

டி.டி.வி தினகரனுக்கு கட்சிப் பொறுப்பு வகிக்க தகுதியில்லை என்ற கூறிய தீபக், பன்னீர்செல்வத்திற்குத் தான் தகுதி உள்ளது என்றார்.