அதிமுகவின் முந்தைய ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. இந்நிலையில், 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னதாக, முன்னாள் முதல்வர் பழனிசாமி, பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் அளிக்கப்பட்ட இந்தப் புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த உயர்நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில், புகார் அளித்து ஐந்து ஆண்டுகள் கடந்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தனது புகார் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், தனது புகார் குறித்து விசாரணையை துவங்கி உள்ளதாக கூறிய லஞ்ச ஒழிப்புத்துறை, எந்த முடிவையும் எட்டவில்லை என்பதால், தமிழக காவல் துறையினர் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் சிபிஐ உள்ளிட்ட மத்திய புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது நீதி பரிபாலனத்தில் குறுக்கிடுவது போல் உள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் விசாரணைக்கான அனுமதியை திரும்பப் பெற்ற அரசாணையை ரத்து செய்து, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது