EPS
EPS pt desk
தமிழ்நாடு

”அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலின் நேரில் விவாதிக்க தயாரா?”- எடப்பாடி பழனிசாமி சவால்

webteam

சேலம் மாவட்டம் நங்கவள்ளி தெற்கு ஒன்றியத்தில், தோரமங்கலம் பகுதியில் அதிமுக கொடியை, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்...

அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட 100 ஏரிகள் நிரப்பும் திட்டம் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். இந்தத் திட்டத்தை முடக்கி வைத்தது திமுக அரசு. அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் திருமண உதவி திட்டத்தின் கீழ் பயன் பெற்றனர். 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை அறிவித்தோம் அவற்றை திமுக அரசு நிறுத்திவிட்டது.

cm stalin

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது என்று முதலமைச்சர் கூறுகிறார். ஊழலில் தான் வளர்ச்சி அடைந்துள்ளது. முன்னாள் நிதியமைச்சர் கூறிய 30 ஆயிரம் கோடி ஊழல் குறித்து பேசினால் வழக்கு தொடுப்பேன் என்கிறார் ஸ்டாலின். எந்த வழக்கு வேண்டுமானாலும் போடட்டும். அதிமுக ஆட்சியின்போது எங்களால் வழக்கு போட்டிருக்க முடியாதா?.

நாங்கள் மக்களுக்கு நன்மை செய்வதற்கு தான் வந்தோம். அதனால்தான் நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சி தந்தோம். இரண்டு ஆண்டுகள் ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? அவரது குடும்பம் வளர்ந்தது தான் மிச்சம். வாய்ப்பு கொடுத்த மக்களை ஏமாற்றக் கூடாது. அதிமுக ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அது குறித்து என்னோடு நேரில் விவாதிக்க தயாரா?.

அமைச்சர் செந்தில் பாலாஜி

உச்ச நீதிமன்ற உத்தரவு படிதான் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மடியில் கனமில்லை என்றால் வழியில் ஏன் பயம்?. தமிழகத்தில் 3,500 பார்கள் டெண்டர் விடப்படவில்லை. அதன்மூலம் கிடைக்கும் ஊழல் பணம் மேல் இடத்திற்குச் செல்கிறது. ஒரு நாளைக்கு ஒரு கோடி மது பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால் ஸ்டாலின் கோட்டையில் இருக்க முடியாது.

ஸ்டாலின் பேசும்போது தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று பேசுகிறார். எங்களை அடித்தால், நாங்கள் திருப்பி அடித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று பேசுகிறார். இப்படிப்பட்ட முதலமைச்சர் ஆட்சி செய்வது தமிழகத்திற்கு தலைகுனிவு. ஸ்டாலினின் மிரட்டலுக்கு யாரும் பயப்பட மாட்டார்கள். நகை பறிப்புக்கு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர்க்கு துப்பில்லை. ஆனால், போட்டோ ஷூட் மட்டும் செய்து கொள்கிறார். முதலமைச்சரின் பேச்சு மக்களை அச்சுறுத்தும் விதமாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

83 ஆண்டுகளாக மேட்டூர் அணை தூர்வாரப்படவில்லை, எனது ஆட்சியில் தான் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் வண்டல்மண் அள்ளிக் கொள்வதற்கு அனுமதி வழங்கினேன். ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் விடிவு பெற வேண்டும் என்றால், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்” என்று பேசினார்.