தமிழ்நாடு

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சம் மோசடி - கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது

Sinekadhara

மகளிர் சுய உதவி குழுக்களின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து 97 லட்சம் மோசடி செய்த மத்திய கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் வணிக குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வேலூரில் உள்ள வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை வங்கி குடியாத்தம் நகரில் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில் நடுத்தர மக்கள் பயனடையும் வகையிலும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கிலும் குறைந்த வட்டியில் பல்வேறு சலுகைகளுடன் பயிர்க்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், சிறு, குறு தொழில் முனைவோருக்கான கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு குடியாத்தத்தை சுற்றியுள்ள கிராமப்புற பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு திடீரென குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து ஒரு கடிதம் தபால் மூலம் வரப்பெற்றுள்ளது.

அதில் "தாங்கள் வாங்கிய கடன் தொகையை உடனே செலுத்துமாறும், இல்லையென்றால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது". இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்கள் வங்கிக்கு நேரடியாகச் சென்று "தாங்கள் எந்த கடனையும் இங்கு வாங்கவில்லை; அப்படி இருக்க எங்களுக்கு எப்படி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்". மேலும் பல கடன் தொகைகள் நீண்ட காலமாக செலுத்தப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. வங்கியில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கிய கடன்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து கூட்டுறவு சங்க தணிக்கை குழு அதிகாரிகள் குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கிக்கிளையில் தணிக்கை நடத்தினர்.

அப்போது 2018-2019 ஆம் நிதியாண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பெயரிலும், போலியான பயனர்கள் பெயரிலும் போலி ஆவணம் தயாரித்து சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வரை கடன் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பான தொடர் விசாரணையில் 2018-19 காலகட்டத்தில் அவ்வங்கியின் மேலாளராக இருந்த உமா மகேஸ்வரி என்பவர் நேரடியாக இம்மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

ஏற்கெனவே இவ்வங்கியில் கடன்பெற்று திரும்பி செலுத்தியவர்களின் ஆவணங்களை எடுத்து புதியாக கடன்பெறுவது போன்று தயார்செய்து தானே அத்தனை பணத்தையும் எடுத்ததும் தெரியவந்தது. இது இரண்டு ஆண்டுகளாக நடந்துவந்துள்ளது. இது தொடர்பாக மேலாளர் உமா மகேஷ்வரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தணிக்கை குழுவால் பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில் இவர்மீது வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி வேலூர் வணிக குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவல்துறையினர் விசாரணை முடிவில் தற்போது வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வரும் உமா மகேஸ்வரியை கைதுசெய்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் பல மோசடிகள் தெரியவந்து இன்னும் சிலர் இதில் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.