தமிழ்நாடு

ரூ. 1 கோடிக்கு வாடகை பாக்கி... 63 கடைகளுக்கு சீல்... ! அதிரடி காட்டிய மாநகராட்சி

webteam

திண்டுக்கல் மாநகராட்சிக்குச் சொந்தமான 63 கடைகள் ரூ.1 கோடிக்கு மேல் வாடகை பாக்கி வைத்திருந்ததால் அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

திண்டுக்கல் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள், பேருந்து நிலையம், அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட், தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, மீன் மார்க்கெட், பங்காளி மார்க்கெட், காந்தி காய்கறி மார்கெட் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

இந்தக் கடைகளில் உணவகம், டீக்கடை, மளிகைகடை, அரிசிகடை, பலசரக்கு கடை என பல கடைகளை வணிகர்கள் நடத்தி வருகின்றனர். இதில், மாநகராட்சிக்குச் சொந்தமான 63 கடைகள் ஒரு வருடத்திற்கு மேல் ரூ.1 கோடி வரை வாடகை பாக்கி வைத்துள்ளனர். இதில் குறிப்பாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மட்டும் 11 கடைகள் ரூ.16 லட்சத்து 51ஆயிரத்து 500 பாக்கி வைத்துள்ளனர்.

இதையடுத்து வாடகையை கட்ட வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் வணிகர்கள் வாடகையை கட்டவில்லை. இதனை அடுத்து இன்று 02.12.22 வாடகை கட்டாத கடைகளுக்கு அதிரடியாக மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சீல் வைத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.