தமிழ்நாடு

கொரோனா முன்னெச்சரிக்கை : டீக்கடைகள், உணவகங்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்

webteam

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டீக்கடைகள், உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.‌ இந்தியாவில் கொரோனாவுக்கு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பெரிய கடைகளை மூடவும் சிறு கடைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்னையில் உள்ள டீக்கடைகளிலும் ஓட்டல்களிலும் திடீர் சோதனையில்
ஈடுபட்டனர்.

அப்போது டீக்கடைகளில் டம்ளர்களை வெந்நீர் மற்றும் சோப் போட்டு கழுவ வேண்டும் என அறிவுறுத்தினர். ஊழியர்களுக்கு சளி, காய்ச்சல் போன்று
ஏதேனும் தொந்தரவுகள் தெரிந்தால் பொது சுகாதாரத்துறை அதிகாரியை அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் உணவகங்களுக்கு
வரும் வாடிக்கையாளர்களுக்கு கை எப்படி கழுவ வேண்டும் என்பன போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துச் சொல்ல
வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். கொரோனா அறிகுறிகள் தெரிந்தால் பொதுசுகாதாரத் துறை அதிகாரியை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.